திருச்சி

முதல்வர் வேட்பாளரைப் பெரும்பான்மையான கட்சி என்னும் அடிப்படையில் அதிமுக தீர்மானிக்கும் என பாஜக மேலிட பொருப்பாளர் சி டி ரவி கூறி உள்ளார்.

பாஜக மற்றும் அதிமுக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளன.  ஆயினும் பாஜகவினர் தமிழக முதல்வர் வேட்பாளரை பாஜக தீர்மானம் செய்யும் எனப் பேசி வருகின்றனர்.  குறிப்பாக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்டோர் இது போல பேசி வருகின்றனர்.  இதற்கு கே பி முனுசாமி உள்ளிட்ட அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசிய பொதுச்செயலாளரும், பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி,  ”தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் அதிமுகவே முதல்வர் வேட்பாளரைத் தீர்மானிக்கும். நாங்கள் பெரும்பான்மை கொண்ட கட்சி இல்லை என்பதால் எங்களால் தீர்மானிக்க முடியாது

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் எங்களை ஆதரிக்கின்றனர். கே.பி.முனுசாமியின் கருத்தையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  அதிமுக அதிகாரப் பூர்வமாகத் தீர்மானிக்கும் முதல்வர் வேட்பாளரை பாஜக ஏற்றுக் கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் நேற்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.  ஆயினும் தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.   அந்த அறிவிப்பு வெளியான பிறகு பாஜக தங்கள் கூட்டணியில் அதிமுக பெரும்பான்மையான கட்சி என ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.,