சென்னை
சென்னை ஓட்டேஇ மேம்பாலம் பகுதியில் அதிமுகவினர் தினகரனை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று முன் தினம் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த சென்றனர். அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அமமுக தொண்டர்கள் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ் கார் மீது செருப்பை வீசினர். எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து அதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஓட்டேர் மேம்பாலம் பகுதியில் அதிமுக மூத்த தலைவர்கள் காரை வழிமறித்து அமமுகவினர் தகராறில் ஈடுபட்டதை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் திருவிக நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அமமுக தொண்டர்களை கட்டவிழ்த்து விட்டு வன்முறையில் ஈடுபடும் டிடிவி தினகரனை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தலைமைச்செயலக காலனி குடியிருப்பு போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர். அப்பகுதியில் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.