கடலூர்
அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளின் போது கடலூரில் நடந்த கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில் கடலூர் மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என பிரிக்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட அதிமுக தேர்தல் டிசம்பர் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான சம்பத் மனு வழங்குவது உள்ளிட்ட ஆயத்த பணிகளைக் கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று மேற்கொண்டார்.
கடலூர் நகரத் துணை செயலாளர் கந்தன் தரப்பினர்,” அனைத்து வார்டுகளுக்கும் புதிய விண்ணப்பம் வழங்க வேண்டும். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். பழைய ஆட்களுக்கு வழங்கக்கூடாது” எனக் கோரிக்கை வைத்தனர். மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகி குமார் மற்றும் ஆறுமுகம் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாதல் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் வலுத்துள்ளது.
முன்னாள் அமைச்சர் சம்பத் இவர்களைச் சமாதானம் செய்துவிட்டு, புறப்பட்டு சென்றார். அதற்குப் பிறகு மீண்டும் இரு தரப்பினரும் அதிமுக கட்சி அலுவலக வளாகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கைகலப்பு உருவானது. இந்த கைகலப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இருதரப்பு ஆதரவாளர்கள் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
அப்போது கடலூர்- திருவந்திபுரம் சாலையிலும் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பயத்தில் சிதறி ஓடினர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த கோஷ்டி மோதலில் நகர துணைச் செயலாளர் கந்தன் மற்றும் சேவல்குமார் தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், ராதாகிருஷ்ணன், பாலாஜி உள்ளிட்டவர்கள் படுகாயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் இதையடுத்து கட்சி அலுவலக வளாகம் மற்றும் கடலூரில் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மோதல் குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.