சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாய்ஸ் மூலம் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு நாடாளுமன்ற தேர்தலில், அதிமுகவுக்கு வாக்குகள் கேட்கும் விதமாக அதிமுக ஐடி பிரிவினர் தேர்தல் நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.
சமீபகாலமாக பல நாடுகளின் தேர்தல் முடிவுகளை சமூக வலைதள பிரசாரங்களே முடிவு செய்து வருகின்றன. அதுபோல, இந்தியாவிலும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், எலக்ட்ரானிக் மீடியாக்கள் மற்றும் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மேலோங்கும் என்பதில் வியப்பேதுமில்லை.
இந்த நிலையில், மொபைல் போனில் தொடர்புகொண்டு, ஜெயலலிதா வாக்கு கேட்பது போன்ற வாய்ஸ் உடனான ஆடியோ பிரச்சாரத்தை அதிமுக ஐடி குழுவினர் உருவாக்கி உள்ளனர்.
ஏற்கனவே கடந்த தேர்தலின்போது, ஜெயலலிதாவே ஓட்டு கேட்கும் வாய்ஸ் மொபைல் போன்களில் வெளியான நிலையில், அவரது மறைவுக்கு பிறகு மீண்டும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறும் நோக்கில் அவரது குரல் மூலம் வாக்குகள் கேட்கும் பணியை அதிமுக தொடங்கி உள்ளது.
பொதுமக்களின் மொபைல் எண்ணுக்கு வரும் போன்காலை எடுத்தவுடன், மொபைல் எண்ணுக்கு உரியவரின் பெயரை அழைத்து, அவரிடம் ஜெயலலிதா வாக்கு கேட்பது போன்று அமைக்கப்பட்டு உள்ளது. மறைந்த ஜெயலலிதாவின் குரலை போனில்கேட்கும் அதிமுகவினர் உற்சாகத்துடன் தேர்தல் பணி ஆற்றுவதாக கூறப்படுகிறது.