சென்னை:
தமிழகத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு, திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்தார்.
4 சட்டமன்ற தொகுதிக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரவக் குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின், மே 23ஆம் தேதிக்கு பின் அதிமுக ஆட்சி தானாக கவிழும் என கூறினார்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் பதவியை பறித்து தான் எடப்பாடி ஆட்சியில் நீடிக்கிறார் என்று குற்றம் சாட்டியவர், எடப்பாடி அரசு தானாக கவிழும் என்று கூறினார்.
தமிழகத்தில் ஆட்சியை கலைக்க திமுக முயற்சிப்பதாக, எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் 23ம் தேதிக்கு பின்னர் அதிமுக ஆட்சி தானாக கவிழும் என்று கூறிய ஸ்டாலின், அப்போது மோடி இருக்க மாட்டார், மே 23ஆம் தேதிக்கு பிறகு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று உறுதிப்பட கூறினார்.
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் என்று கூறிய ஸ்டாலின், அதன்பிறகு திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.