சென்னை
முந்தைய அதிமுக அரசு ரூ.2,000 கோடி நிதியைப் பயன்படுத்தாமல் வீணடித்துள்ளதாகத் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று புதிய அரசு அமைத்துள்ளது. முந்தைய அதிமுக அரசில் பல திட்டங்கள் செயல்படுத்த படாமல் இருந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதையொட்டி தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட படி சிறப்புப் படை அமைக்கப்பட்டது. அந்த படையின் கண்டுபிடிப்புக்களை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பழனிவேல் தியாகராஜன்,
“வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் தமிழக அரசு ஆகஸ்டு மாதம் வெளியிட்ட வரவு-செலவு திட்டத்தின் அடிப்படையில் அரசு முக்கியமாகப் பல பயன்களை அடைந்துள்ளது.
முடங்கி உள்ள பணத்தை மீட்டெடுக்கவும், செலவு செய்யாத திட்டத்தின் நிதிகளை மீட்டெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி செலவு செய்யப்படாத சுமார் 2 ஆயிரம் கோடி நிதிகளைத் திரும்பப் பெற்று வருகிறோம். கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் உள்ள குளறுபடிகள் கண்டறியப்பட்டு உள்ளது.
நகைக்கடன் தள்ளுபடியில் கணிசமான தொகை தவறாகக் கடன் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தகுதியானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பண பயன் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒரே நபர் பலமுறை பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு சிறிய நிலத்துக்காகக் கடன் பெற்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. சில இடங்களில் நகை மதிப்பீடு முறையாக நடத்தாமலும் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இது போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் புதிய அணுகுமுறை மூலம் தீர்வு காணப்படும். மறைந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம் சென்று இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இதே போல் மறைந்தவர்கள் பெயரிலும் ரேஷனில் இலவச அரிசி பெறுவதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.
தவறாக நிதி சென்றடையக் கூடாது என்பதை அறிந்து அந்த பணம் மிச்சப் படுத்தப்பட்டு உள்ளது. முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்க முதல்- அமைச்சர் கட்டளையிட்டதின் அடிப்படையில் தகுதியானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உள்ளோம்.
அரசுத் திட்டங்களின் பயன்கள் உரியப் பயனாளிகளுக்குச் சென்றடைவதை இந்த அரசு உறுதி செய்யும்”
எனத் தெரிவித்துள்ளார்.