சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.பி. உள்பட  மற்றும் பல்வேறு கட்சியினர் இன்று திமுகவில் இணைந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில முதல்வர்க பதவி ஏற்று ஆட்சி அமைத்ததும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தியாளர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உள்பட பலர் திமுகவுக்கு தாவிய நிலையில், அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளைச் சேர்ந்த பலரும் திமுகவுல் இணைந்து உள்ளனர்.

இந்த நிலையில், இன்று 2001-2006 காலகட்ட அ.தி.மு.க ஆட்சியின் போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த வ.து.நடராஜன்  உள்பட பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள், திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்,

ராமநாதபுரத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வ.து நடராஜன் திமுகவில் இணைந்தார். அதேபோல அமமுகவை சேர்ந்த ம.சேகர், வ.து.ஆனந்த், முன்னாள் அமைச்சர் மகன் பட்டுக்கோட்டை செல்வமும் திமுகவில் இணைந்தனர். மேலும், தஞ்சாவூர், தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், கன்னியாகுமரி, உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் தி.மு.கவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அதேபோல் அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோவிந்தராஜன் தி.மு.கவில் இணைந்தார். அவருடன் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுக்கட்சியினரும் தி.மு.கவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியானது  அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், முத்துசாமி, கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அமைச்சர்கள், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு மற்றும் தி.மு.க துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.