கடந்த 2019 தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் பிரச்சாரம் செய்த பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்” என்று பேசிய பேச்சு, மிகப்பெரிய கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் ஆளானது.
பொன்.ராதாகிருஷ்ணன் மட்டுமல்ல, இதுபோன்ற பலவிதமான கருத்துக்களை உதிர்ப்பதில் பாஜகவினர் புகழ்பெற்றவர்கள்தான். ஆனால், தற்போது அந்த விஷயத்தில், அவர்களையே மிஞ்சியவர்கள் நாங்கள் என்று அதிமுகவினர் தங்களை சொல்லிக்கொள்ளும் வகையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்துவோம், சிஏஏ சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவோம், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்போம், 7 தமிழர்கள் விடுதலை விஷயத்தில் விரைந்து முடிவெடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பன போன்ற அபத்த வாக்குறுதிகள் அத்தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நீட் தேர்வை கொண்டுவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களே அவர்கள்தான்! சிஏஏ சட்டத்தை ஆதரித்து வாக்களித்தவர்களும் அவர்கள்தான். தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளில், சகட்டு மேனிக்கு வெளிமாநிலத்தவர்களை அனுமதித்தவர்களும் அவர்கள்தான். இப்படி எத்தனை எத்தனையோ! புதிய வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவாக வாக்களித்தவர்கள்! 7 தமிழர்கள் விடுதலை விஷயத்தில் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடி வருபவர்கள்!
எனவே, ஆட்சியில் இருந்தபோது அனைத்திற்கும் காரணமாக இருந்தவர்கள், தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளித்தால், அவற்றையெல்லாம் சரிசெய்வோம் என்று கூறுவதென்பது பாஜகவின் அபத்த ஸ்டலைப் பின்பற்றுவதேயன்றி வேறில்லை!