சென்னை

சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்த 49 பேர் பலியாகியுள்ளனர். இத் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி, அ.தி.மு.க. வழக்கறிஞர்ல: டி.செல்வம், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் கொண்ட அமர்வில் நேற்று காலையில் முறையிட்டனர்.

நீதிபதிகள், இதுகுறித்து மனு தாக்கல் செய்தால், இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர். எனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சட்டத்துறை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனுவில்,

“கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 49 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ்ந்த பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என்றும் கூறப்படுகிறது. அந்த பகுதியைச் சேர்ந்த கன்னுக்குட்டி (வயது 49) என்ற சாராய வியாபாரி விற்ற 200 லிட்டருக்கும் மேற்பட்ட பாக்கெட் சாராயத்தால் 38 பேர் அநியாயமாக பலியாகியுள்ளனர். இதனால் இறந்தவர்களின் குடும்பம் நிர்கதியாகியுள்ளது.

கள்ளச்சாராய வியாபாரியான கன்னுக்குட்டிக்கும், உள்ளூர் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அந்த தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட கள்ளச்சாராய வியாபாரி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

மாவட்ட ஆட்சியர், காவல்துறை சூப்பிரண்டு ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இதுகுறித்து சட்டசபையிலும் எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசியுள்ளார். அவர் அளித்த புகார் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருந்தாலே, இப்போது அநியாயமாக இத்தனைபேர் உயிரிழந்து இருக்கமாட்டார்கள்.

எனவே, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் விஷ சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உடல்களை முறையாக பிரேத பரிசோதனை செய்து அந்த அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவும், விஷ சாராயத்தால் பலியானவர்கள் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்”

என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.