கடந்த 1977ம் ஆண்டு முதல், இதுவரை மொத்தம் 10 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்துள்ள அதிமுகவுக்கு, இந்த 2021 சட்டமன்ற தேர்தல் சற்று மாறுபட்ட தேர்தலாகும்.
ஏனெனில், இரட்டை தலைமையில், இரட்டை இலைச் சின்னத்தில் அக்கட்சி, முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது.
கடந்த 1989 சட்டமன்ற தேர்தலில், அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்தது. இதனால், அக்கட்சியின் சின்னமும் முடக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்பிறகு, வேறு எந்த பொதுத் தேர்தலிலும் இரட்டை இலை சின்னம் முடக்கப்படவில்லை. மேலும், வேறு எந்த சட்டமன்ற பொதுத்தேர்தலையும், அதிமுக இரட்டை தலைமையில் சந்திக்கவில்லை.
இப்போது, முதன்முதலாக, இரட்டை இலை சின்னம் கையில் இருக்கையில், அக்கட்சி இரட்டைத் தலைமையில் ஒரு சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை அக்கட்சி இரட்டை தலைமையில், இரட்டை இலை சின்னத்துடன் சந்தித்தது. அதில் படுதோல்வியடைந்தது.
இந்நிலையில், 10 ஆண்டுகால ஆட்சியின் மீது மாபெரும் அதிருப்தி அலை வீசும் சூழலில், சட்டமன்ற தேர்தலையும், இரட்டைத் தலைமையில் சந்திக்கிறது!