விழுப்புரம்
இன்று அதிமுக நடத்திய ஆர்ப்பாட்ட கூட்டத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளை முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் தரக்குறைவாகப் பேசி உள்ளார்.
இன்று அதிமுகவினர் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாடம் நடத்தினர். அதில் விழுப்புரத்தில் அதிமுக மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி வி சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது அவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகளை பற்றி கேவலமாகப் பேசியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
சி வி சண்முகம், “நேரடியாக லஞ்ச ஒழிப்பு காவலர் இந்த துறைக்கு வந்ததில்லை, அவர்களும் இதற்கு முன்பு சட்டம் ஒழுங்கு போலீசில் பணி ஆற்றியவர்கள்தான். அவர்கள் அப்போது திருடர்களிடம் மாமூல் வாங்கிய இரண்டு வீடுகளை கட்டியவர்கள்தான், இப்போது நேர்மையாக இருப்பதுபோல் செயல்படுகிறார்கள். அவர்களின் சட்டையைக் கழற்றாமல் விட மாட்டோம்” என உரையாற்றினார்
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேச்சுக்கு சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆர்வலர்கள் இது குறித்து ”திமுக ஆட்சிக்கு வந்து 7 மாதம்தான் ஆகிறது. அதிமுக தான் கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருந்தது. சண்முகம் எந்த ஆட்சியில் இருந்த காவல்துறையைத் தாக்கிப் பேசியுள்ளார் என்று தெரியவில்லை. அவர் ஒருவேளை அதிமுக ஆட்சியில் காவல்துறை நடந்து கொண்ட விதத்தைச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. அவரது பேச்சு கடும் கண்டனத்துக்குரியது” எனத் தெரிவித்துள்ளனர்.