சென்னை
அதிமுக அணிகள் போட்டி போட்டுக் கொண்டு பாஜக வை ஆதரிக்கும் போது அதிமுக கட்சி நாளிதழில் மோடியின் மத்திய அரசை விமரிசித்து கவிதை பதிந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அதிமுக தற்போது மூன்று அணிகளாக பிளவு பட்டு இருக்கிறது. பிளவு என்பது கட்சிக்குள்ளே தானே தவிர மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதில் அனைத்து அணிகளும் சேர்ந்து ஆதரிக்கின்றன. இதில் தினகரன் அணியினர் மட்டும் மத்திய பா ஜ க அரசின் மேல் சிறிது மன வருத்தத்துடன் உள்ளனர். இதற்குக் காரணம் பா ஜ க வின் சொல்லப்படாத நிபந்தனையான சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைக்க வற்புறுத்துவதே.
கட்சியின் தலைமை அலுவலகம் முதல்வர் பழனிச்சாமி அணியிடம் உள்ளது. அதே நேரத்தில் அதிமுக அதிகாரபூர்வ நாளேடு ஆன நமது எம் ஜி ஆர் தினகரன் அணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. தினகரன் அணியும் ஜனாதிபதி தேர்தலில் பா ஜ க வேட்பாளரை ஆதரித்தது தெரிந்ததே. இந்நிலையில் நமது எம் ஜி ஆர் நாளேட்டில் ஒரு கவிதை வெளியானது.
‘உதய்’யை ஏற்று ஒத்துழைப்பு தந்தோம்.
சேவை மற்றும் சரக்கு வரிக்கு சேர்ந்து கோஷம் புரிந்தோம்.
‘நீட்’டுக்கும் தலை வணங்கி நெருக்கடி யில் நெளிந்தோம்.
வர்தா புயல் நிதிக்கு, கையேந்தி வழிபாத்து கிடந்தோம்.
வறட்சி நிவாரணம் வருமான்னு விழி பிதுங்கி நடந்தோம்.
கேட்டது எதுவும் கிடைக்கல.
கெட்டது எதுவும் விலகல…
கழகங்களில்லா தமிழகம்னு,
கலர் கலரா கனவுகளில் காவிகள் துள்ள,
கன்னித்தமிழ் பூமியின் கோப அலையை திசை திருப்ப,
காதல் கிழவரசனோ கழக அரசை பழித்து கதைகள் பல சொல்ல,
மாற்றாந்தாய் போக்கை வெல்ல,
மன்றாடுது தமிழ் உலகம்”
இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.