அ.தி.மு.க.வின் பொதுக்குழு-செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜெ. தோழி சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஜெயலலிதா மறைந்த ஓரிரு நாட்களிலேயே, “சசிகலாதான பொதுச்செயலாளர் பதவிக்கு வரவேண்டும்” என்று அதிமுக நிர்வாகிகள் பேச ஆரம்பித்தனர்.
அதே நேரம், “கட்சியில் ஐந்தாண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவர்தான் பொதுச்செயலாளராக முடியும் என்பது விதி. சசிகலா 2012 முதல்தான் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். ஆகவே அவர் பொதுச்செயலாளர் ஆக கட்சி விதி இடம் தராது” என்று ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகின.
மேலும், தமிழகமெங்கும் சசிகலா – ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றிருந்த போஸ்டர்களில், சசிகலா படத்தை தொண்டர்கள் கிழித்தனர்.
இந்த நிலையில் சசிகலாவை சந்தித்த கட்சி நிர்வாகிகள் சிலர், “தற்போது நீங்கள் பொ.செ. ஆக வேண்டாம். உங்கள் சார்பாக யாராவது ஆகட்டும். பிறகு தகுந்த சூழலில் நீங்கள் பொ.செ. ஆகிவிடலாம்” என்றும், இதை சசிகலா குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் “இணைப் பொதுச்செயலாளர்” என்ற பதவி உருவாக்கப்பட உள்ளதாகவும், சசிகலா அந்த பதவியில் அமருவார் என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
அதாவது பொதுச்செயலாளர் பதவி நிரப்பப்படாமல் அப்படியே இருக்கும்.
இதன் மூலம் கட்சியில் உள்ள ஒரு சில எதிர்ப்புகளையும் சமாளித்துவிட முடியும் என்று சசிகலா நம்புவதாக அ.தி.மு.க. வட்டாரம் தெரிவிக்கிறது.