சென்னை

திமுக தேர்தல் கூட்டணி கட்டாயக் கல்யாணம் என்பதால் அவசரமாக நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

இன்று காலை அதிமுக – பாமக வரும் மக்களவை தேர்தலில் கூட்டணை அமைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த கூட்டணி அறிவிப்பில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று மாலை வெளியான மற்றொரு அறிவிப்பில் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகியது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் இன்று டில்லியில் ராகுல் காந்தி உடன் தேர்தல் கூட்டணி குறித்த கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம்,”மக்களவை தேர்தலை பொறுத்தவ்ரை அதிமுக கூட்டணி என்பது ஒரு முழுகும் கப்பலாகும். அந்த கட்சியுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அவர்களும் மூழ்குவார்கள்.  திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சொன்ன பாமக அதிமுகவை திராவிட கட்சியாக கருதவில்லை என தோன்றுகிறது.

பாஜகவுக்கு தமிழ்நாட்டில் அஸ்திவாரம் கிடையாது ஆகவே அந்த கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த போதிலும் வெற்றி அடையாது., ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக வும் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இந்த கூட்டணிகள் குறித்த அறிவிப்புக்கள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளன. அதிமுக தேர்தல் கூட்டணி என்பது ஒரு கட்டாய கல்யாணம் ஆகும். அத்தகைய கல்யாணம் அவசரமாகத் தான் நிகழும்” என தெரிவித்துள்ளார்.