புதுடெல்லி:

அதானி நிறுவனத்தின் மின் உற்பத்தி நிலையத்துக்கு நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதை எதிர்த்து, ஆதிவாசி மக்களும், கிராம மக்களும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


ஜார்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 4 கிராமங்களைச் சேர்ந்த ஆதிவாசி மக்கள் மற்றும் கிராம மக்கம் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவிலேயே ஜார்கண்ட் தான் ஏழை மாநிலம். அதானி நிறுவனம் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக, நில ஆர்ஜித சட்டத்தை முதன்முறையாக மாநில அரசு செயல்படுத்துகிறது.

அனைத்து நிலங்களும் சட்டத்துக்கு புறம்பாக ஆர்ஜிதம் செய்ய அடையாளம் காணப்படுகின்றன. கடந்த 2016-ம் ஆண்டு அதானி நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி, மின் திட்டத்துக்காக 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு ஜார்கண்ட் அரசை கேட்டுக் கொண்டார்.

6 கிராமங்களிலிருந்து 917 ஏக்கர் நிலத்தையும், 4 கிராமங்களில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலத்தையும் ஆர்ஜிதம் செய்ய மாநில அரசு முடிவு செய்தது.

இது மக்கள் நலனுக்கான திட்டம் என்றனர். ஆனால், பங்களாதேஷுக்கு மின்சாரத்தை விற்பதற்காகவே இந்த அனல் மின் நிலையத்தை அதானி நிறுவனம் இங்கு தொடங்கவுள்ளது.

இது சுற்றுச் சூழலை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நில ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து போராடிய ஆதிவாசிகள் மற்றும் கிராம மக்கள் மீது போலீஸார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் அரசு, நிலங்களுக்கு மிகக் குறைந்த இழப்பீட்டையே நிர்ணயித்துள்ளது.

நில ஆர்ஜிதம் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நியாயமாக நடக்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
கிராம சபை கூட்டத்தில் போட்ட தீர்மானத்தை மீறி அதானி நிறுவனத்துக்காக நில ஆர்ஜிதம் செய்கின்றனர்.

அதானியின் அனல் மின் உற்பத்தி திட்டத்துக்கு விவசாய நிலத்தையும் தனியார் நிலத்தையும் ஆர்ஜிதம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.