பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்ய சென்றுகொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 4வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக  சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி விண்ணில் செலுத்தி உள்ளனர்.  இந்த விண்கலமானது   பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து   கடந்த 2-ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது. பின்னர் இந்த விண்கலம், புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம்தான் சூரியன். சூரியனிலிருந்து ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் செயற்கைகோளை நிலைநிறுத்தி, அதன் மூலம் சூரியனின் செயல்பாடுகள் தொடர்பாக ஆராய்வது தான் ஆதித்யா எல்1 திட்டத்தின் நோக்கம்.  இந்த விண்கலம் சூரிய மண்டலத்தை அடைய 4 மாதங்கள்  ஆகும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

ஆதித்யா-எல்1 என்பது பூமியிலிருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் அமைந்துள்ள முதல் சூரியன்-பூமி லாக்ராஞ்சியன் புள்ளியை (எல்1) சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இருந்து சூரியனை ஆய்வு செய்யும் முதல் இந்திய விண்வெளி அடிப்படையிலான ஆய்வகம் ஆகும். ஆதித்யா-எல்1 பூமியிலிருந்து தோராயமாக 1.5 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கும், சூரிய மண்டலத்தை  4 மாத பயணத்திற்கு பின்னரே சென்றடையும். தற்போது இந்த விண்கலம்   சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் சுற்றுவட்டப்பாதை அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது.  செப்டம்பர் 3, 5 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது  முறையாக வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையை இஸ்ரோ விஞ்ஞானிகள் உயர்த்தி உள்ள நிலையில் நேற்று இரவு 4-வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 19-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப் பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோ பதிவிட்டுள்ள டிவிட்டில்,

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுவட்டப் பாதையின் உயரம் 256கி.மீ. X 1,21, 973 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது. செப்.19ல் புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும். விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

4வது முறையாக சுற்று வட்டப்பாதை உயரம் இன்று அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 5வது முறை சுற்றுவட்டப்பாதை உயர்வு நடவடிக்கை வரும் 19ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா-எல்1 சூரியனில் இறங்காது அல்லது சூரியனை நெருங்காது. சூரிய மண்டலத்தில்  இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, ஆதித்யா எல்1 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.