பெங்களூரு

ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் லெக்ராஞ்சையன் 1 புள்ளியை நோக்கிய பயணத்தைத் தொடங்கி உள்ளது. 

கடந்த 2 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆதித்யா எல் 1 விண்கலம் புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்து புவி வட்டப்பாதையில் தனது பயணத்தைத் தொடங்கி தற்போது விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 4 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இது குறித்து’

“ஆதித்யா-எல்1 மிஷன்: சன்-எர்த் எல்1 பாயிண்டிற்குச் சென்றது..!! Trans-Lagrangean Point 1 Insertion (TL1I) சுற்றுப்பாதை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது. விண்கலம் இப்போது சூரியன்-பூமி L1 புள்ளிக்கு எடுத்துச் செல்லும் பாதையில் உள்ளது. இது சுமார் 110 நாட்களுக்குப் பிறகு ஒரு முயற்சியின் மூலம் எல்1 சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இஸ்ரோ ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு வான உடல் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்”

என்று பதிவிட்டுள்ளது.