தூத்துக்குடி:
ஆதிச்சநல்லூரில் நடத்திய மண் பரிசோதனையில், அந்த இடம் கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய 905-696 ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் பகுதியிலிருந்து கார்பன் துகள் கலந்த மண் கடந்த மார்ச் 18- தேதி பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கிருந்து வந்த பரிசோதனை இறுதி அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பழமைவாய்ந்த இடம் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது.
மத்திய அரசே இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யுமா அல்லது மாநில அரசை அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசு அனுமதிக்குமா என்பதை இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆதிச்சநல்லூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தொல்பொருள் ஆய்வு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி தலைமையில் முதல் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.
அறிவுஜீவிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டதன்பேரில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு கார்பன் துகள் கலந்த மண் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இந்த விசத்தில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையம் ஒன்றுமே செய்யவில்லை. அதற்கான காரணம் அவர்களுக்குத் தெரியும்.
ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பரவு கொண்ட அந்த பகுதியை கையகப்படுத்தி, அப்பகுதிக்கு சேதம் ஏற்படாதவாறு போலீஸ் அவுட்போஸ்ட் அமைக்குமாறு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி மையத்துக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இதேபோல், ராமநாதபுரம் அழகன்குளத்தில் எடுக்கப்பட்ட மண் பரிசோதனையின்படி, அந்த பகுதி கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய 345 -ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது, தமிழ் மொழி பழமையானது என்பது தெளிவாகிறது. இது தொடர்பாக மாநில தொல்பொருள் ஆராய்ச்சி துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.