டில்லி
மோடி அரசின் அமைச்சர்கள் எந்த ஒரு திட்டத்திலும் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
ஆதார் அட்டை முதலில் வங்கிக் கணக்கு, எரிவாயு மானியம் ஆகியவைகளுக்கு அவசியம் எனச் சொல்லப்பட்டது. அது விரிவடைந்து பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடனும் ஆதார் எண் இணைத்தாக வேண்டும் என ஆகி விட்டது. தற்போது மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அனில் கல்லகி என்பவர் ஒரு மனு அளித்திருந்தார். அந்த மனுவில் அனைத்து அமைச்சர்களின் ஆதார் எண் மற்றும் அவர்கள் எந்தெந்த திட்டத்துடன் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என கேள்வி எழுப்பி இருந்தார். அந்த மனு ஐந்து வெவ்வேறு அமைச்சகத்துக்கு ஒன்றன் பின்னாக மாற்றப்பட்டது. அது மட்டும் இன்றி மத்திய செயலகம், மக்களவை செயலகம், மேல்துறை செயலகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எல்லா இடங்களிலும் சுற்றி விட்டு இறுதியாக அரசின் ஆதார் நிறுவனத்துக்கு பிரதமர் அலுவலகம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் மூலம் கிடைத்த தகவலின் படி எந்த ஒரு அமைச்சகத்துக்கும் மத்திய அமைச்சர்களின் ஆதார் எண் அளிக்கப்படவில்லை. அது மட்டும் இன்றி அமைச்சர்களின் ஆதார் பற்றிய விவரங்கள் ஆதார் நிறுவனத்தாலும் தரப்படவில்லை. இதனால் எந்த தகவலும் பெற முடியாத கல்லகி, “இந்த அமைச்சரவை அவர்கள் சொல்வதை அவர்களே பின்பற்றவில்லை எனத் தெரிகிறது. சாதாரண மக்கள் அனைத்து மானியங்களுக்கும் அக்கவுண்டுகளுக்கும் ஆதார் எண் அளித்து வருகின்றனர். ஆனால் அந்த சட்டம் அமைச்சர்களுக்கு கிடையாது என நான் அறிந்துக் கொண்டேன். அதனால்தான் பிரதமரின் அலுவலகத்தில் கூட இது பற்றிய விவரங்கள் காணப்படவில்லை” என கூறி உள்ளார்.