கும்பகோணம்: தமிழ்நாடு அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுவில் போதை இல்லை என கூறி, கூடுதல் போதைக்காக அத்துடன், சானிடைசர் கலந்துகுடித்த 2 குடிமகன்கள் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் 24மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் முறைகேடாக செயல்பட்டு வரும் நிலையில், போதைப்பொருட்களின் நடமாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதகா தெரிவித்து வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகள் மதியம்தான் திறக்கப்படுவதாக கூறி வருகிறது. ஆனால், போதைப்பொருட்கள் சகஜமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், அவ்வப்போது பலர் மரணத்தை தழுவுவதுடன், போதை தலைக்கேறி பாலியல் சேட்டைகளிலும் ஈடுபட்டுகின்றனர்.
இந்த நிலையில், கும்பகோணம் அருகே மேலக்காவேரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் படித்துரையில் இரண்டு பேர் உயிரிழந்து கிடந்துள்ளனர். இதை கண்ட பொதுமக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், உயிரிழந்து கிடந்த இருவரும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளிகள் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் அமர்ந்து மது அருந்தியது தெரிய வந்துள்ளது. அவர்களது சடலத்திற்கு அருகே மதுபாட்டில்கள் கிடந்ததுடன், சானிடைசர் பாட்டில்களும் கிடந்துள்ளன.
இதன் காரணமாக அவர்கள் இருவரும் கூடுதல் போதைக்காக மதுவில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது போலி மதுபானம் எதாவது குடித்து உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.