கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு திடீரென சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது விசாரணை அதிகாரி யாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியாக பதவி வகித்த ஷகீல் அக்தர் திமுக ஆட்சிக்கு வந்ததும் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம், சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரை கோடநாடு கொலை கொள்ளை விசாரணை அதிகாரியாக தமிழகஅரசு நியமித்து உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அவரது கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கொள்ளை, கொலை சம்பவம் நடைபெற்றது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கோடநாடு கொலை கொள்ளைச் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக அரசு மீண்டும் வழக்கை விசாரணை நடத்த உத்தரவிட்டு, மறுவிசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக தனி அதிகாரியாக கோவை எஸ்பி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. கோடநாடு வழக்கில் சசிகலா, விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்த சமயத்தில், கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஷகில் அக்தர் ஏற்கனவே திமுக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ஆம் தேதி அதிகாலை வாக்கிங் செய்ய சென்றவர் வீடு திரும்பவே இல்லை. அதற்கு பிறகுதான் அவர் மர்மமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட தகவல் தமிழகத்தை அதிர வைத்தது. இந்த வழக்கையும் ஷகில் அக்தர்தான் விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.