அகமதாபாத்: பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மீண்டும் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ரூ.376.5 கோடி மதிப்புள்ள 75 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம், பிரதமர் மோடியின் நண்பரான அதானி குழுமத்துக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு, அடிக்கடி போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற போதைப்பொருள் கடத்தலின்போது, கண்துடைப்புக்காக ஒருசில கடத்தல்கள் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டதாக வெளி உலகுக்கு தெரிய வைப்பதும் வாடிக்கையாகி வருகிறது. தற்போது, ரூ.376.5 கோடி மதிப்புள்ள 75 கிலோ ஹெராயின் பறிமுதல் கண்டெய்னர் மூலம் கடத்தி வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற கடத்தல் நடவடிக்கைகளால், இந்தியாவின் போதைபொருள் கடத்தல் கேந்திரமாக குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் மாறி உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதானி நிறுவனம் நாடு முழுவதும் 12 துறைமுகங்களை நிர்வகிக்கிறது. அதில் முந்த்ரா, டுனா, தாஹேஜ், ஹசிரா ஆகிய நான்கு துறைமுகங்கள் குஜராத்தில் உள்ளன. இதில் முந்த்ரா துறைமுகத்தில் அதானி போர்ட்ஸ் நிறுவனம் அனைத்து கண்டெய்னர்கள், பேரல்கள், எரிவாயு ஆகிய அனைத்து சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த துறைமுகத்தில் அடிக்கடி போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில், பலமுறை இங்கு வந்திறங்கிய கண்டெய்னர்கள் மூலம் போதைபொருட்கள் கடத்தி வரப்படுவதி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தற்போது, ரூ.376.5 கோடி மதிப்புள்ள உயர் தூய்மையான 75.3 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த சரக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் ஃப்ரீ சோனிலிருந்து மே 13 அன்று முந்த்ரா துறைமுகத்திற்கு வந்து பஞ்சாபிற்கு கொண்டு செல்லப்பட இருந்தது. தைக்கப்படாத துணிகள் கொண்ட ஒரு கொள்கலனில், அட்டைக் குழாயைப் பயன்படுத்தி, அதிக அளவு பிளாஸ்டிக் பைப் மூலம், ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டு, கடத்தப்பட்டுள்ளது என குஜராத் டிஜிபி ஆஷிஷ் பாட்டியா தெரிவித்து உள்ளார். கடத்தப்பட்ட பொருட்களை சோதனை மூலம் பஞ்சாப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் குஜராத் ஏடிஎஸ் குழு சந்தேகத்திற்குரிய கண்டெய்னரை கண்டுபிடித்து சோதனை நடத்தியது, அதில், சர்வதேச சந்தையில் ரூ.376.5 கோடி மதிப்புள்ள உயர் தூய்மையான 75.3 கிலோ ஹெராயின் பிளாஸ்டிக் குழாய்களில் அடைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடித்து, குஜராத் ஏடிஎஸ் குழுவினர் மீட்டனர் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,988 கிலோ ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்தது. இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர். அதில் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதை பவுடர்கள், ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
அவற்றின் சர்வதேச மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் தமிழகத்தின் பெயரும் அடிபட்டது. ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் சென்னை தம்பதியை வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 2021ம் அண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, குஜராத் முந்த்ரா துறைமுகத்தை நடத்தி வரும் அதானி குழுமம், “எங்களுடைய கட்டுப்பாட்டில் துறைமுகம் கையாளப்பட்டாலும், அதில் உள்ள கன்டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதை திறக்கும் அதிகாரமும் அவர்களுக்கே உள்ளது. அதில் எங்களுடைய பணி ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அதானி குழுமத்தை தொடர்புபடுத்தி வெளியிடப்படும் செய்தி தவறானது என மறுப்பு அறிக்கை வெளியிட்டது.
இருந்தாலும் அதானி கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் மூலம் கடத்தல்கள் நடைபெறுவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 25ந்தேதி (2022), அன்று 1,439 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்துக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் துறைமுகத்தில் உள்ள கன்டெய்னர்களை சோதனை செய்தனர்.
அதைத்தொடர்ந்து, ஏப்ரல் 29ந்தேதி காந்திநகர்: குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஹெராயின் கடத்தப்படுவதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவனருக்கும், வருவாய் புலனாய்வு இயக்குனரக (DRI) அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பிபாவாவ் துறைமுகம் விரைந்த அலுவலர்கள், கன்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 90 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. முதல்கட்ட தகவலில், இந்த 90 கிலோ ஹெராயின் சந்தை மதிப்பு சுமார் ரூ.450 கோடி என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டுமே 2,180 கோடி ரூபாயாகும். மதிப்பிலான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்த 2 மாதங்களில் மேலும் ரூ.376.5 கோடி மதிப்புள்ள 75 கிலோ ஹெராயின் கடத்தி வரப்பட்டுள்ளதும், அது பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் சில ஆண்டுகளாகவே அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக அதானி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முந்த்ரா துறைமுகத்திலேயே நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றன. மக்களையும், அரசையும் ஏமாற்றும் நோக்கில், அவ்வப்போது சில கடத்தல்களை மட்டுமே, சோதனை பறிமுதல் என கூறி வெளி உலகுக்கு காட்டுவதாகவும், பெரும்பாலான கடத்தல்கள் மறைக்கப்படுவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரதமர் மோடிஅரசின் நிர்வாக திறமையின்மையால், பொதுநிறுவனங்கள், துறைமுகங்கள் போன்றவற்றை தனியாருக்கு தாரை வார்ப்பதால், இதுபோன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன என்றும், இந்தியாவின் போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக அதானியின் முந்த்ரா துறைமுகம் திகழ்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.