டெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி குழுமம் கடும் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால், எல்ஐசி, எஸ்பிஐக்கு ரூ.78,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதானி விவகாரத்தில் நிதி அமைச்சகம் அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பிரபல ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த வாரம் அறிக்கை வெளி யிட்டது. இதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தன. இதனால், உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்தவர், தற்போது, 7 வது இடத்திற்கு பின்தங்கினார். தொடர்ந்து அவரது பங்குகள் இன்று 3வது நாளாகவும் சரிவை சந்தித்துள்ளன.
இதுதொடர்பாக கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் ரன்தீப் சுர்ஜேவாலா , “அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும், விசாரணை அமைப்புகளும் ஏன் அமைதி காக்கின்றன. “எல்ஐசி ஒரு பொதுத் துறை நிறுவனம். அதில் இருப்பது மக்கள் பணம்.
மக்கள் பணத்தைக் கொண்டு எல்ஐசி, அதானி குழுமத்தில் ரூ.77 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையால், இந்த முதலீட்டில் எல்ஐசிக்கு ரூ.23,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர்த்து எல்ஐசியின் பங்கு மதிப்பு ரூ.22,500 கோடி சரிந்துள்ளது.
அதேபோல் அதானி குழுமத்துக்கு பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ரூ.81,200 கோடி கடன் வழங்கியுள்ளது. அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு காரணமாக இவ்விரு பொதுத் துறை நிறுவனங்கள் பங்கு மதிப்பு ரூ.78 ஆயிரம் கோடி சரிந்துள்ளது.
ஆனால், இத்தகைய சூழலிலும் மீண்டும் எல்ஐசி ரூ.300 கோடி, எஸ்பிஐ ரூ.225 கோடி அதானி குழுமத்தில் முதலீடு செய்கின்றன. இது குறித்து ரிசர்வ் வங்கி, செபி, அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளும் மத்திய நிதி அமைச்சகமும் இன்னும் அமைதி காக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.