புதுடெல்லி:
தானி குழும முறைகேடு புகார் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.

இந்திய பணக்காரர்களில் நம்பர் 1 இடத்திலும், உலக பணக்காரர்களில் 3வது இடத்திலும் இருந்த கௌதம் அதானியின், அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் , அண்மையில் அறிக்கை வெளியிட்டது. பல ஆண்டுகளாக பங்குச்சந்தையில் முறைகேடு, போலி நிறுவனங்களை தொடங்கி மோசடி என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், அதானி சம்ராஜ்ஜியமே ஆட்டம் கண்டது. தொடர்ந்து 10 நாட்களாக அதானி குழும பங்குகள் கடும் சரிவை கண்டன. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் 17வது இடத்திற்கு தள்ளப்பட்டார் கௌதம் அதானி.

இந்த குற்றச்சாட்டு வெளியானதில் இருந்தே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றன. பாஜகவும், பிரதமர் மோடியும் பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதுகுறித்து கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை அல்லது உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பு விசாரணை நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நடப்புக் கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 4 நாட்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே வழக்கறிஞர் விஷாஸ் திவாரி என்பவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

அதில், அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பெர்க் அறிக்கை மீது விசாரணை நடத்தக் கோரியும், தனது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.. இதனிடையே, கடந்த வாரம் வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், உள்நோக்கத்துடன் செயல்பட்டு, செயற்கையாக அதானி குழும பங்கு மதிப்பை சீர்குலைத்து, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நிறுவனர் நேதன் ஆண்டர்சனும், அவரைச் சேர்ந்தவர்களும் அதிக லாபம் அடைந்து வருவதாக கூறியிருந்தார்.

மேலும், நேதன் ஆண்டர்சன் மீது, மோசடி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே அதானி குழு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோரி வரும் நிலையில், இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.