தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து விட்டு, இந்திக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு பல ஆண்டுகள் கனவுக்கன்னியாக திகழ்ந்தார்.
சென்னை கடற்கரையில் ஸ்ரீதேவியியின் குடும்பத்துக்கு சொந்தமான இல்லம் உள்ளது. மும்பைக்கு ஸ்ரீதேவி குடி பெயர்ந்த பின், அந்த வீடு பராமரிக்கப்படாமல் இருந்தது.
ஸ்ரீதேவியின் மரணத்துக்கு பிறகு அந்த வீட்டுக்கு அவரது கணவர் போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் வருவதில்லை. இந்நிலையில் அந்த வீடு அண்மையில் புணரமைக்கப்பட்டது.
கடந்த வாரம் அந்த வீட்டுக்கு போனிகபூர் , மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் வந்திருந்தனர்.
தங்களது நெருங்கிய உறவினர்களுடன் புத்தாடை அணிந்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
“இந்த வீடு எங்கள் அம்மாவின் கனவு இல்லம். வீடு சிதிலம் அடைந்திருந்ததால், நாங்கள் ரொம்ப நாட்களாக இங்கு வரவில்லை. அதனை சீரமைத்த பின் இப்போது தான் வந்துள்ளோம்,” என்று தெரிவித்த ஜான்வி, “இந்த முறை சென்னை வந்தபோது நீண்ட காலத்துக்கு பிறகு பழைய சொந்தங்களை பார்க்க முடிந்தது” என்றார்.
சென்னையில் தீபாவளியை கொண்டாடி விட்டு, போனிகபூரும், மகள்களும் மும்பை சென்று விட்டனர்.
– பா. பாரதி