மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கு சொந்தமான வீட்டை ஏலத்தில் விற்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
பழம்பெரும் கர்நாடக இசை பாடகி, எம்.எல்.வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீவித்யா. இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில், 1966 முதல், 2000 ஆண்டு வரை திரைப்படங்களில் நடித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, ஸ்ரீவித்யா, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், 2006ம் வருடம் இறந்தார்.
இறுதிக் காலத்தில், அவரது சொத்துக்களை, மலையாள நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான கணேஷ்குமார் நிர்வகித்து வந்தார். ஸ்ரீவித்யாவுக்கு, சென்னை அபிராமபுரத்தில் உள்ள குடியிருப்பில், 1,250 சதுர அடி பரப்பளவில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை, வருமான வரி நிலுவை காரணமாக ஏலம் விட, வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
வரும், 27ம் தேதி, ஏலம் நடக்க உள்ளதாகவும், வீட்டின் ஆரம்ப விலை, 1.17 கோடி ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது