நகரி:
ஊழல் ஒழிப்பு பற்றி பேசிக்கொண்டு, ஊழலில் திளைக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை புகழ்வதா என்று நடிகர் கமலுக்கு பாடம் எடுத்திருக்கிறார் நடிகை ரோஜா.
கமல்ஹாசன் நேற்று ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை துவங்கி யிருக்கிறார். துவக்க விழா மேடையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடுவிடம் கொள்கைகள் குறித்து ஆலோசனை கேட்டேன். அவர் கூறிய கருத்துக்கள் நான் நினைத்தது போல் இருந்தது என்று அவரை மிகவும் பாராட்டி பேசினார்.
இதற்கு நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
“அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி பேசி இருக்கிறார்.
கமல் பா.ஜனதாவை எதிர்த்து வருகிறார். ஆனால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் சந்திரபாபுநாயுடுவை பாராட்டி உள்ளார். தெலுங்கு தேசத்தை சேர்ந்த 2 பேர் மத்திய மந்திரிகளாக உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் பா.ஜனதாவை சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர்.
மேலும் சந்திரபாபு நாயுடு மீது ஊழல் புகார்கள் இருக்கின்றன. . ஓட்டுக்கு பணம் கொடுத்து அவர் பேசிய ஆடியோ வெளியாகிய வழக்கு நிலுவையில் உள்ளது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறும் கமல் ஊழல் புகாரில் சிக்கிய சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். சந்திரபாபு நாயுடு பற்றி அவர் தெரியாமல் பேசுகிறாரா? அல்லது தெரிந்தே பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அதை கமல் தெளிவுபடுத்த வேண்டும்” என்று ரோஜா தெரிவித்துள்ளார்.