வாடகைத் தாய் குறித்த தனது பதிவை விக்னேஷ் சிவன் – நயன்தாரா விவகாரத்துடன் சம்பந்தப்படுத்தி திரித்து பதிவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

“நயனும் நானும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மாவாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் பிரார்த்தனைகளும், எங்கள் முன்னோரின் ஆசீர்வாதமும் இணைந்து இரண்டு குழந்தைகளாக வெளிப்பாடாகி இருக்கிறது. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் வேண்டும்” என்று விக்னேஷ் சிவன் நேற்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்த தகவல் அனைத்து ஊடகங்களிலும் பரபரத்தது.

தவிர, ஜூன் மாதம் 9 ம் தேதி திருமணமான இருவருக்கும் அக்டோபர் மாதம் 9 ம் தேதி சரியாக நான்கு மாதத்தில் குழந்தை பிறந்தது குறித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமன்றி பட்டி தொட்டியெங்கும் பேசுபொருளானது.

இந்த நிலையில் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது.

“ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்த வாடகைத் தாய் சட்டப்படி மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர மற்றவர்களுக்கு இந்தியாவில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது” என்று நடிகை கஸ்தூரி நேற்றிரவு தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும், “அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கஸ்தூரியின் இந்த பதிவைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா குழந்தை விவகாரம் மேலும் பரபரப்பானதை அடுத்து எனது பதிவை விக்னேஷ் சிவன் – நயன்தாரா உடன் தொடர்பு படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார்.

சட்டப்படி திருமணமான (21 வயது நிரம்பிய ஆண் மற்றும் 18 வயது நிரம்பிய பெண்) ஜோடி தாங்கள் திருமணம் செய்து ஐந்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பெறுவதில் சிக்கல் இருந்தால் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சட்டம் வழிவகுத்துள்ளது.

வாடகைத் தாய் விவகாரம் தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில் நடிகை கஸ்தூரியின் இந்த சட்ட நடவடிக்கை பதிவு இந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்கி உள்ளதாகவே கருதப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரத்தில் சட்டத்தை ஏமாற்றினார்களா ? அல்லது சமூகத்தை ஏமாற்றினார்களா ? என்பது குறித்து சட்ட பாதுகாவலர்களும், கலாச்சார பாதுகாவலர்களும் தீவிரமாக விவாதித்து வரும் நிலையில் இந்த விவகாரம் குறித்து விக்னேஷ் சிவன் – நயன்தாரா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.