நடிகை கஸ்தூரி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரின் இந்த பேச்சுக்கு ஆந்திர மாநில பாஜக-வினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருமாநில மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இதையடுத்து, சென்னை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கஸ்தூரியை விசாரிக்க காவல்துறையினர் அவரது வீட்டிற்கு சம்மனுடன் சென்ற நிலையில் அவரது வீடு பூட்டியிருப்பதைக் கண்டனர்.
தவிர, அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், காவல்துறை நடவடிக்கைக்கு பயந்து அவர் தலைமறைவாகி இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
நடிகை கஸ்தூரி மாயமானதை அடுத்து அவரை தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளதாகவும் அவர் தமிழ்நாட்டை விட்டு வேறு மாநிலங்கள் எங்கும் சென்றுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.