ராம்பூர்
நடிகை ஜெயப்ரதா ராம்பூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
நடிகை ஜெயப்ரதா தமிழ். தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார். சினிமா துறையிலிருந்து விலகிய ஜெயப்பிரதா 1994ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். பிறகு ஜெயப்பிரதா மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.
அதன் பிறகு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய ஜெயப்ரதா 2019 ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். அவர் அப்போது தேர்தல் விதியை மீறி ஒரு சாலையைத் திறந்து வைத்ததாக ராம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு ராம்பூரில் உள்ள நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. ஜெயப்பிரதா நேரில் ஆஜராக நீதிமன்றம் 7 முறை சம்மன் அனுப்பியும் ஜெயப்பிரதா விசாரணைக்கு ஆஜராகாமல் தாமதித்து வந்தார். எனவே ஜெயப்ரதாவை தலைமறைவான குற்றவாளியாக அறிவித்து கைது செய்து முன்னிறுத்தும்படி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யும்படி ஜெயப்ரதா தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடியானது. எனவே ஜெயப்ரதா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.