சென்னை:
நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக நடிகர் சங்க தேர்தல் 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று மாலை தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் கூடுகிறது.
நடிகர் நாசர் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில், தேர்தல் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடிகர் சங்க தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் சரத்குமாருக்கு எதிராக போட்டியிட்ட விஷால், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அந்த 6 மாதகால அவகாசம் முடிவு பெற்றிருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும், துணைத் தலைவர் பொன்வண்ணன், “தேர்தலுக்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து அதன்பின்னர் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று அவசர செயற்குழு கூட்டம் கூடுகிறது. சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை அறிவியல் கல்லூரியில், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி வேலனின், 33ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய நாசர் இதை உறுதிப்படுத்தினார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நாசர், நடிகர்கள் சங்கத்தில், 3ல் இரண்டு பங்கு நாடக கலைஞர்கள் உள்ளதாகவும், அவர்களின் வாழ்க்கைத்தரம், கடந்தமுறையைக் காட்டிலும் 70 சதவிகிதம் முன்னேறி உள்ளதாக கூறினார்.
ஆனால், சுதந்திர இந்தியாவில் முதல் தீவரவாதி இந்து தான் என்ற கமல் கருத்துக்கு பதில் அளிக்க, நடிகர் நாசர் மறுத்து விட்டார்.
நடைபெற உள்ள நடிகர் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு மீண்டும் நாசர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. பொருளாளராக பூச்சி முருகன் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாசரை எதிர்த்து ராதிகா சரத்குமார் தலைமையிலான அணி களமிறங்கலாம் என்றும் கூறப்படுகிறது.