சென்னை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு, நடிகர் விவேக், அடுத்த நாளே மரணம் அடைந்தார். இந்த மரணத்தில் மர்மம் உள்ளதாக விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பான புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி காமெடி நடிகரான விவேக், அப்துல்கலாம் மீது மிகுந்த மரியாதை கொண்டவர். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த விவேக் சமூக சீர்த்திருத்தக் கருத்துகளையும் திரைப்படம் வாயிலாக மக்களிடையே சென்றடைவதில் அதிக அக்கறை கொண்டவர். மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முழுவதும் மரங்களை நடுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த விவேக், மக்களிடையே கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இருந்த தயக்கத்தை போக்கும் வகையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஏப்ரல் 15-ம் தேதி கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அது தொடர்பாக பேட்டியும் அளித்தார்.
ஆனால், தடுப்பூசி எடுத்துக்கொண்ட மறுநாள் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு தடுப்பூசிதான் காரணமாக என்று குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், தமிழகஅரசு சார்பில் விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தடுப்பூசி போட்டதால் விவேக் இறந்துவிட்டார் என்பது தவறானது. விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கம் அளித்தார். அதுபோல விவேக்குக்கு சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனையும் தடுப்பூசிக்கும்விவேக் மரணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று விளக்கம் தெரிவித்தது.
ஆனால், மக்களிடையே ரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால்jன் காமெடி நடிகர் விவேக் மரணமடைந்தார் என்று சந்தேகம் நீடித்து வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்திருந்தார்.
இந்த புகார் குறித்து ஆய்வு செய்த தேசிய மனித உரிமை ஆணையம், விவேக் மரணத்தில் உள்ள மர்ம குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளது. அத்துடன் விவேக் மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை உள்பட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.