சென்னை:
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி சென்னையில் நடந்தது.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், அப்துல் கலாமின் தீவிர ரசிகர். அப்துல்கலாம் நினைவை போற்றும் வகையில் “கிரின் கலாம்” என்ற அமைப்பு தொடங்கி தமிழகம் முழுவதும் மரம் நட்டு வருகிறார்.
வரும் 27-ந் தேதி அப்துல் கலாம் முதலாவது நினைவு நாளாகும். அதை முன்னிட்டு நடிகர் விவேக்கின் ‘கிரீன் கலாம்’ அமைப்பு சார்பில் சென்னையில் இன்று மரக்கன்று நடும் விழா மற்றும் அமைதி பேரணி நடந்தது.
சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலையில் ஆரம்பித்து காந்தி சிலை வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் விவேக்குடன் சேர்ந்து சுமார் 5000 மாணவர்கள் பங்கேற்றனர்.
அதைத் தொடர்ந்து ராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் விவேக் மற்றும் பலர் பேசினர்.
இதுகுறித்து நடிகர் விவேக் கூறியதாவதுது: கடந்த 2010-ம் ஆண்டு முதல் ‘கிரீன் கலாம்’ அமைப்பின் மூலமாக மரக்கன்றுகள் நடுவதாகவும், டாக்டர் அப்துல்கலாம் அய்யா என்னை அழைத்து முதலில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடக் கூறினார். 10 லட்சமாவது மரக்கன்றை அப்துல்கலாம் அய்யாவே கடலூரில் நட்டு சிறப்பித்தார். அதன்பிறகு, அப்துல் கலாம் அய்யா அவர்கள் என்னிடம் ஒரு கோடி மரக்கன்று நடவேண்டும் என்று அன்புக் கட்டளை பிறப்பித்தார்.
அவரின் கட்ளைபடி ஒரு கோடி இலக்கை மனதில் கொண்டு, இதுவரை 24 லட்சத்து 75 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். ஒரு கோடி மரக்கன்று இலக்கே எனது லட்சியம். அதற்கு ‘கிரீன் கலாம்’ அமைப்பு முழு அர்ப்பணிப்போடு செயல்படும்.
இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் பெரும்பாலானவை பள்ளி, கல்லூரி வளாகங்களிலேயே நடப்பட்டுள்ளது. அதை அந்தந்த பள்ளி, கல்லூரி மாணவர்களே தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். நான் இதுவரை தென் மாவட்டங்களில்தான் நிறைய மரங்களை நட்டுள்ளேன். சென்னையில் இதுவரை எதுவும் செய்யவில்லை. அதற்காகத்தான், இப்படியொரு பேரணியை ஏற்பாடு செய்தேன்.
இனி நடவுள்ள மரக்கன்றுகளை பொதுமக்கள் நடமாடும் இடங்களிலும், ஊர்ப்புறங்களிலும் நட ஆசையாக உள்ளது. அதற்காக பொதுமக்கள், தொழில் அதிபர்களின் ஆதரவை நான் வேண்டுகிறேன்.
நடிகர்கள் ஏதாவது பொது விழாக்களில் கலந்துகொண்டால், அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குகிறார்கள். ஆனால், எனக்கு எந்த பணமும் வேண்டாம். அதற்கு பதிலாக மரக்கன்றுகளை கொடுங்கள்.
அதேபோல், 25 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நடுவதற்கு ஏதாவது விழா எடுத்தால், நான் எதுவும் எதிர்பார்க்காமல் வந்து அந்த விழாவை சிறப்பித்து தருகிறேன் என்றார்.
பேரணியில் கலந்துகொண்ட 5000 மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.