நடிகர் விமல் அளித்த புகாரில் சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கி வெளிவந்த மன்னர் வகையறா படம் பணப் பிரச்சனை காரணமாக தனது A3v தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து வந்ததாகவும்
அவர்களை நம்பி பல காசோலைகளிலும் ஆவணங்களிலும், கையெழுத்திட்டதாகவும், இந்நிலையில் படத்தை தயாரிக்க 3 கோடி ரூபாய் செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி ரூபாய் கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தன்னிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த நான்கு கோடி ரூபாய் பணமும், படத்திற்காக கடனாக வாங்கிய 3 கோடி ரூபாய் பணத்திற்கான வட்டிக்காக செலவாகி விட்டதாக சிங்காரவேலன் தெரிவித்ததாகவும், அசல் 3 கோடி ரூபாய் பணத்துக்காக எதிர்வரும் காலத்தில் படங்கள் நடித்து சம்பளத்தின் மூலம் தான் கொடுத்தாகவும் புகாரில் கூறியுள்ளார்.
சேட்டிலைட் உரிமை மற்றும் வெளிநாட்டு விநியோக உரிமை மூலம் 8 கோடி ரூபாய் கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் தன்னை பைனான்சியரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன் மோசடி செய்துள்ளதை கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்களிலும் மற்றும் காசோலைகளிலும் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்ததாகவும் அவர்கள் மூவர் மீதும் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் நடிகர் விமல் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது சென்னை விருகம்பாக்கம் போலீசார் சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளருமான சிங்காரவேலன், கோபி மற்றும் விக்னேஷ் ஆகிய மூவர் மீது மோசடி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.