‘பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. ஆகவே அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்’ என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து 14 பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மேலும் குறைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை “மஞ்சள் பை இயக்கம்” என்ற பெயரில் ஆரம்பித்தார்.
கடந்த 2021 டிசம்பர் மாதம், சென்னை கலைவாணர் அரங்கத்தில் இதற்கான விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பல்வேறு சமூப்பணிகளை செய்து வரும் விஜய் ரசிகர்களும் , துணிப்பைகளை பிரபலப்படுத்தும் பணியில் இறங்கி உள்ளனர்.
இது குறித்து ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வாரம்தோறும் ஞாயிற்றுகிழமை அன்று “தளபதி” மக்கள் இயக்கத்தின் சமூக நலப்பணி நாள் என்று அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திட்டம் நடைமுறைபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தளபதி விஜய் அவர்களின் உத்தரவின்படி , அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்து ஆலோசனையின்படி அனைத்து மாவட்டங்களிலும் நேற்று, பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்க பிரசாரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சிலருக்கு வெள்ளை வண்ண பைகள் கொடுத்தாலும், பெரும்பாலும் மஞ்சள் வண்ண பைகளே அளிக்கப்பட்டன. இது கவனத்தை ஈர்த்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் மஞ்சள் நிற பைகளையே பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துகின்றனர். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களும் மஞ்சள் வண்ண பைகளை பிரச்சாரம் செய்கின்றனர்.
இதனால், “முதலமைச்சர் வழியில் விஜய் செல்கிறாரா… அல்லது முதலமைச்சருக்கு போட்டியாக செயல்படுகிறாரா” என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் இப்போதெல்லாம் வண்ணங்கள் முக்கியத்துவம் பெருகின்றன.
கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சைக்கிளில் வாக்களிக்க வந்தார் விஜய். அப்போது கருப்பு சிவப்பு வண்ண சைக்கிளை பயன்படுத்தினார். இதுவே பலவித யூகங்களை கிளப்பியது.
ஆகவே தற்போது விஜய் ரசிகர்கள் மஞ்சள் நிற பைகளை பயன்படுத்துவதும் யூகத்தை ஏற்படுத்துகிறது.