சென்னை:
பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், நடிகர் விஜய்க்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஜய், யாரை எங்கு வைக்க வேண்டுமே அங்கு வைக்க வேண்டும் என்றும், அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்றார்.
விஜயின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில்,பிகில் இசை வெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்த் திரைப்பட உலத்தினரால் இளைய தளபதி என்று அழைக்கப்படுகிற நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காக தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கல்லூரி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.
இந்த விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளும் அதிமுகவினருக்கு எதிராக கூறியதாக தவறாக புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திரைப்பட பாடல் வெளியீட்டு வீழவிற்கு அனுமதி வழங்கியதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தலுக்கு கல்லூரி நிர்வாகம் இரையாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. கலைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். எனவே இதைவிட ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார்