சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தனது கட்சியின் முதல் மாநாடு வரும் 27ந்தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கான பந்தக்கால் விழா இன்று காலை நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரான நடிகர் விஜய் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார். இது அவரது கட்சி பிரமுகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கட்சி தலைவராக நடிகர் விஜய் கலந்துகொள்ளாத நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்சினிமாவின் நடிகரான விஜய் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, தனது ரசிகர்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சி யாக, கடந்த (2024) பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, பல்வேறு தடைகள் ஏற்பட்ட நிலையில், தற்போது வரும் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தவெக கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் இந்த மாநாட்டிற்கான பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பல்வேறு குழுக்களை அமைத்து மாநாடு பணிகளை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று அதிகாலை மாநாட்டு மேடை அமைப்பதற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி தலைவரான விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்த்த நிலையில், அவர் பந்தக்கால் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதையடுத்து பந்தக்கால் நிகழ்ச்சி தவெகவின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 1000– த்திற்கும் மேற்பட்டோர் அதிகாலையில் நடைபெற்ற இந்த பந்தக்கால் நடும் விழாவில் கலந்துகொண்டனர். இதையடுத்து, மாநாட்டுக்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளன.