சென்னை: இருதய நோய் சிகிச்சைக்காக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த், நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரின் இருதய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சையின்றி ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் ஒரு நாள் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள்ளார். அவரது உடல் நலம் சீராக உள்ளது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நாளை டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.
‘கூலி’ படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், சென்னை திரும்பிய நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக செப். 30 ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகளையும் சில மருத்துவப் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில், ரஜினியின் இதயத்திலிருந்து வரும் முக்கிய தமனி எனும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதற்கு அறுவைசிகிச்சையின்றி, டிரான்ஸ்கேத்தடர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படிட ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், ஆஞ்சியோ பிளாஸ்டும் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது, குணமடைந்து வருகிறார், அவர் நாளை வீடு திரும்புவார்’ என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.