ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்துக்குள் சமூகவிரோதிகள் சிலர் புகுந்துவிட்டார்கள். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜனிகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
“ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசரச்சட்டம் தேவை என நீங்கள் கடந்த ஒருவாரமாக அமைதி வழியில் போராடிய உங்கள் உழைப்புக்கும், நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக விரோதிகள் சிலர் புகுந்துவிட்டார்கள். ஆதலால், இந்த அறவழிப்போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நிரந்தரச் சட்டம் இயற்றும் வரை மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், இளைஞர்களும், மாணவர்களும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதனால், அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே நகரின் பல இடங்களில் மோதல் ஏற்பட்ட பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்கக் கோரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், பெண்கள், அனைத்து தமிழக மக்கள் அனைவரும் வரலாறு கண்டிறாத போராட்டம் நடத்தினார். அமைதியாக, ஒழுக்கத்துடன், அறவழியில் நீங்கள் நடத்திய போராட்டம் உலகில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டைப் பெற்றது. இந்திய சரித்திரத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது.
ஆனால், மெரினா கடற்கரை, நகரின் பல இடங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது நான் மன வேதனை அடைந்தேன்.
மத்திய, மாநில அரசு, நீதி அரசர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் இருந்து ஜல்லிக்கட்டு சட்டம் குறித்து உறுதி கிடைத்துள்ளது. அவர்களுக்கு மதிப்பு அளித்து, நம்பிக்கை வைத்து அவர்கள் கூறிய நாட்கள் வரை அமைதி காப்பது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கண்ணியமான செயலாகும்.
உங்களின் இந்த உழைப்புக்கும், முயற்சிக்கும் , நீங்கள் ஈட்டிய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் சில சமூக விரோதி சக்திகள் உங்கள் போராட்டத்துக்குள் புகுந்துள்ளனர். உங்களின் போர்வையில் சமூகவிரோதிகள் செய்யும் செயல், உங்களுக்கு இதுநாள் வரை பாதுகாப்பாக இருந்த போலீசாருக்கு களங்கம் விளைவிக்கும் இருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காமல் அமைதியாக, இந்த அறவழிப் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தனது அறிக்கையில் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்