சென்னை
நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் போலீசார் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டு கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்பட்டது.
போலீசார் கடந்த 2 நாட்களாக தேடி வந்த சூழலில், நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். கிருஷ்ணாவை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் விற்பனையாளர் கெவின் என்பவருடன் நடத்திய வாட்ஸ் அப் உரையாடல் மூலம் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த கெவின் நடிகர் கிருஷ்ணாவிற்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பிறகு நடிகர் கிருஷ்ணா இன்று காலை கைது செய்யப்படு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆகியோரை ஜூலை 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.