டில்லி

கோமியத்தை விமர்சித்ததால் தேசத் துரோக வழக்கில் சிக்கிய ஆர்வலரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது.

பிரபல அரசியல் ஆர்வலரான லீசோம்பாம் எரண்டோ என்பவர் மணிப்பூரை சேர்ந்தவர் ஆவார்.  சுமார் 37 வயதாகும் இவர் தனது முகநூல் பக்கத்தில் பசுவின் சாணி மற்றும் கோமியம் ஆகியவை கொரோனாவை குணப்படுத்தாது எனப் பதிவிட்டிருந்தார்.  இந்த பதிவு பாஜகவினருக்கு அதிருப்தியை அளித்தது.  எனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது,

பாஜக தலைவர் உஷாம் தேபன், பொதுச் செயலர் பிரேமானந்த மிடாய் ஆகியோர் மணிப்பூர் காவல்துறையில் எரண்டோ மீது புகார் அளித்தனர்.  கடந்த மே 13 ஆம் தேதி இந்த புகாரின் அடிப்படையில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டார்.  இவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் காவல்துறையினர் விடுவிக்கவில்லை.

லீசோம்பாமின் தந்தை ரகுமனி சிங் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுதாரரைத் தொடர்ந்து காவலில் வைத்திருப்பது அவர் வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுவதாக கருதுவதாகக் கூறி அவரை உடனடியாக சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளனர்.