க்னோ

த்தரப்பிரதேச கல்வி வாரியம் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்களை நீக்கி உள்ளது.

உத்தரப்பிரதேச கல்வி வாரியம் இந்த வருடத்தில் இருந்து பாடத்திட்டங்களை மாற்றி உள்ளது.  என் சி இ ஆர் டி முறைப்படி ஆங்கில மொழிப் பாடத் திட்டங்கள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.    இந்த மாற்றப்பட்ட  பாடத்திட்டங்கள் தற்போதைய கல்வி ஆண்டான 2021-22 முதல் அமலாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய பாடத்திட்டங்களில் 10 மற்றும் 12 வகுப்பு ஆங்கில பாடத்தில் நாபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவரும் பிரபல கல்வியாளருமான ராதாகிருஷ்ணன் ஆகியோரின் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.   அதன்படி 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தாகூர் எழுதிய தி ஹோம் இஸ் கமிங் என்னும் கதையும் ராதாகிருஷ்ணன் எழுதிய தி விமன்’ஸ் எஜுகேஷன் என்னும் கட்டுரையும் நீக்கப்பட்டுள்ளன.

இவற்றைத் தவிர 12 ஆம் வகுப்பு பாடங்களில் எல் பாஷாம் எழுதிய தி ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா நீக்கப்பட்டுள்ளது.   மேலும் முல்க் ராஜ் ஆனந்த் எழுதிய தி லாஸ்ட் சைல்ட் மற்றும் ஆர் கே நாராயணன் எழுதிய அன் ஆஸ்டிராலஜர் டே ஆகிய கதைகளும் நீக்கப்பட்டுள்ளன.  மேலும் உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞர்களான ஜான் மில்டன் மற்றும் பிபி ஷெல்லியின் கவிதைகளும் அகற்றப்பட்டுள்ளன.

இதைப் போல் 10 வகுப்பு பாடத் திட்டத்தில் சரோஜினி நாயுடுவின் கவிதையான தி வில்லேஜ் சாங் நீக்கப்பட்டுள்ளது.  மேலும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி, ரேபர்ன், ஆர் சீனிவாசன் ஆகியோரின் படைப்புக்களும் அகற்றப்பட்டுள்ளன.

இது குறித்து உத்தரப்பிரதேச கல்வி வாரிய அதிகாரிகள், ”இந்த புதிய பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் குறைந்த அளவிலான புத்தகங்களை மட்டும் படித்தால் போதுமானதாகும்.  மேலும் முன்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கணத்தைத் தவிர 4 புத்தகங்களைப் படிக்க வேண்டி இருந்தது.  தற்போது “ஃப்ளெமிங்கோ” மற்றும் “விஸ்டாஸ்” ஆகிய இரு புத்தகங்களை மட்டுமே படித்தால் போதும்” எனத் தெரிவித்துள்ளார்.