சேலம்: பூந்தமல்லி அருகே கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு காரணமாக, பெண் ஊழியர்கள் 8 பேர் இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய சேலம் வளர்மதி காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் அருகே செயல்பட்டு வரும் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளில், 5ஆயிரத்துக்கும் மேற்பட் ஆண், பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெண் தொழிலாளர்கள் சாப்பிட்ட உணவு கெட்டுபோய் இருந்ததால், சுமார் 200 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென்று வாந்தி பேதி ஏற்பட்டது. அவர்களில் 159 பேர் பூந்தமல்லியில் உள்ள பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதில் 155 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 பேர் மட்டும் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதுதொடர்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வளர்மதி என்ற பெண் போராளி, .சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஃபாக்ஸ்கான் பெண் தொழிலாளர்கள் 8 பெண்கள் திடீரென காணாமல் போனதாகவும், அவர்கள் இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவின. இதனால், தொழிற்சாலை ஊழியர்கள், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 16 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினார். இதனால் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட கலெக்டர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியது யார் என்பது குறித்தும் சைபர் கிரைம் காவல்துறை விசாரணை நடத்தி வந்தனர். அதில்,வதந்திகளை முதலில் பரப்பியது சேலத்தைச் சேர்ந்த பெண் போராளியான வளர்மதி என்பது தெரிய வந்தது.
இதற்கிடையில், ஃபாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னை வளர்மதியை போலீசார் கிண்டி அருகே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்மீது, கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக கலகம் செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் எம்ஜிஆர் நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வளர்மதியை டிசம்பர் 30 வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாபேட்டை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.