சென்னை: நவம்பர் மாத இறுதிக்குள் சென்னையில் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு (2024) நடந்த கணக்கெடுப்பின்படி சென்னையில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றுக்கு தடுப்பூசி செலுத்துதல், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தல், மைக்ரோ சிப் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை 12 ஆயிரத்து 580 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து தெரு நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களை கடந்த ஆக.9-ம் தேதி மாநகராட்சி தொடங்கியது. இந்த சிறப்பு முகாம் மூலம் மாநகராட்சி கால்நடைத் துறை ஊழியர்கள், மண்டலம் வாரியாக சென்று தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதுவரை 53 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாத இறுதிக்குள் ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாய் இனப் பெருக்கத்தை குறைப்பது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றவர், நாய்க்கடி, பாம்புக்கடிக்கான மருந்து என்பது வட்டார, மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில் இன்றைக்கு தமிழகத்தில் 2,236 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நாய்க்கடிக்கும், பாம்புக்கடிக்கும் மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.