சென்னை:

மிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சபாநாயகரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி கலந்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சி கட்டுப்பாட்டை மீறி விஜயதரணி கலந்துகொண்டதால், அவர்மீது கட்சி மேலிடத்தில் புகார் கூறப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம் நேற்று திறக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சிக்கு திமுக காங்கிரஸ் உள்பட ஒருசில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று கட்சி தரப்பில் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி,கட்சி கட்டுப்பாட்டை மீறி கலந்துகொண்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட விஜயதரணி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெ.வை பார்க்க வந்தது குறித்தும்,  ஜெயலலிதா இறுதிச்சடங்கில் ராகுல் காந்தி பங்கேற்றது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். விஜயதரணியின் இந்த பேச்சு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

விஜயதரணி குறித்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கும்,  தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிற்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் யோசித்து பேச வேண்டும் என்றும்,  ஜெயலலிதா விவகாரத்தில் ராகுல் காந்தியை கேள்வி கேட்க விஜயதரணி யார் என்றும் கேள்வி விடுத்தார்.

ஜெயலலிதா படத்திறப்பு தொடர்பாக விஜயதரணி பேசியது சரியல்ல. சர்ச்சை இருப்பதால்தான் மாவட்டம் மாவட்டமாக செல்லும் ஆளுநரே ஜெயலலிதா படத்திறப்பில் பங்கேற்கவில்லை.

இவ்வாறு திருநாவுக்கரசு கூறினார்.