சேலம்: மின் நுகர்வோர்களிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்கப்பட மாட்டாது; மாதாந்திர மின் கணக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” – மின்சாரம், மதுவிலக்கு & ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
கொரோனா தடுப்பு குறித்து சேலத்தில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது,
இந்த ஆலோசனை கூட்டத்தில், கொரோனா ஊரடங்கால் இந்த மாதம் மின் கட்டணம் கணக்கெடுப்பு பணி நடத்தப்படவில்லை. அதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றவர், கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த மாதம் கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கட்டணம் கட்ட தேவையில்லை. அதுபோல மின்சாரத்திற்க டெபாசிட் தொகை எங்கும் அதிகம் வசூல் செய்யவில்லை. அதே போன்று மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணமும் வசூல் செய்யவில்லை.
இந்த மாத மின் கட்டணம், கடந்த 2019-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மின் கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதாவது 400 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு இருந்தால் அதை 2-ஆக பிரித்து 100 யூனிட் இலவசமாகவும், 100 யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூல் செய்யப்படும்.
அதே போன்று அடுத்த மாதத்திற்கு 100 யூனிட் இலவசமாகவும், 100 யூனிட்டுக்கு மட்டும் கட்டணம் வசூல் செய்யப்படும்.
எனவே மின்சார கட்டணத்தில் எந்தவித குளறுபடியும் இல்லை. மின் கணக்கெடுப்பிலும் எந்த குளறுபடியும் இல்லை.
கொரோனா முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களை பாதுகாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின் கட்டணம் கட்டுவதற்கு கால அவகாசம் வழங்கி உள்ளார். எனவே மக்களுக்கு பாதிப்பு வராது. மேலும் மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.