சென்னை: இரண்டு நாள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர் மீது நடடிவக்கை எடுக்கப்படும் என கூறினார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால்,  சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதியடைந்துள்ளனர். சில இடங்களிலும் மின்சாரமும் நிறுத்தப்பட்டு இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை தொடர்வதால், தண்ணீரை வெளியேற்றும் பணியிலும் சிக்கல் நீடித்து வருகிறது.  வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியார்கள் மீட்டு வருகின்றனர்.

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

மழை பாதிப்புகளை இன்று 3வது நாளாக ஆய்வு செய்த முதல்வர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,   மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள், மீட்பு பணிகள் உள்ளிட்டவை துரிதப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

அப்போது செய்தியாளர்கள், தி.நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை நீர் தேங்கி மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனரே, அதற்கு காரணம் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் தெரிவித்த மு.க.ஸ்டாலின்,  தி.நகர் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதனால்தான் மழைநீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளது.  உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது,  எஸ்.பி.வேலுமணி  கமிஷன் பெற்றுள்ளார். பணிகள் முறையாக நடைபெறாமல் உள்ளதால் ஒப்பந்ததாரர்மீது நடவடிக்கை எடுக்கப்படும், உள்ளாட்சித் துறை என்ன செய்தது என்பது பற்றியும் முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” மழை மீட்பு பணிகள் முடிந்த பின் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.