சென்னை: வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (பைக் டாக்சிகள்) மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை அறிவித்து உள்ளது.
சென்னையில் சமீப நாட்களாக பைக் டாக்சி சேவைகள் அதிகரித்து காணப்படுகிறது. நகர்புறங்களில் அரசு பேருந்துகளின் சேவை எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்பதால், பலர் ஓலா, உபேர், ரேபிடோ போன்ற நிறுவனங்களில் ஆட்டோ, டாக்சிகளை புக் செய்து பயணித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பைக் டாக்சி சேவை அறிமுகம் ஆனது. இதன் மூலம் சில வேண்டத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதால், பல நிலங்களில் பைக் டாக்கி சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் பைக் டாக்சி சேவை தொடர்ந்து வருகிறது. தனியொருவராக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடங்களுக்கு விரைவில் செல்லவும், வாகன நெரிசலில்சிக்காமல் செல்லவும், ஆண் பெண் என அனைத்து தரப்பினரும் பைக் டாக்சி சேவையையே நாடி வருகின்றனர்.
முன்னதாக, ஆன்லைன் கேப் சேவையே குடியிருப்பாளர்களின் முதல் தேர்வாக இருந்தது. இந்த நாட்களில், நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் பைக் டாக்ஸி சேவையை நோக்கி நகர்கின்றனர். “போக்குவரத்து நெரிசல் பிரச்சனை காலப்போக்கில் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து அந்தளவுக்கு இல்லை, எனவே ஆட்டோக்கள் மற்றும் வண்டிகள் பொதுவாக சிக்கிக் கொள்ளும், ஆனால் ஒரு பைக் டாக்ஸி, இருப்பினும், சரியான நேரத்தில் இலக்கை அடைய உங்களை நிர்வகிக்கிறது,” என்று பயணிகள் கூறி வருகின்றனர். இதனால், ஆட்டோ பொன்ற வாடகை போக்குவரத்தை இயக்குபவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் பைக் டாக்சி சேவைக்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (பைக் டாக்சிகள்) மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பைக் டேக்ஸிக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில், மோட்டார் வாகன விதிகளின்படி இருசக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில் விதிகள் மீறப்படுவது தொடர்பாக போக்குவரத்து துறை ஆணையரிடம் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதன்படி, வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள கள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டலம் வாரியாக தினமும் மாலை 7 மணிக்கு அறிக்கை அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பைக் டாக்ஸிக்களை தொடர்ந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில், ரேபிடோ, ஓலா உள்பட பல தனியார் நிறுவனங்களும் பைக் டாக்சிசேவையை நடத்தி வரும் நிலையில், காவல்துறையின் திடீர் உத்தரவால், அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.