சென்னை: அண்ணாவின் பெயரில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித்தொகை ரத்து செய்யப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணாவின் பெயரில் அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ACRF எனப்படும் ஆண்டு உதவித்தொகை ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஜெயா ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆராய்ச்சி மையத்தின் 14-வது செயற்குழுக் கூட்டம் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது.

அதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களில் உள்ள கல்லூரிகளில் முழு நேர முனைவர் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களுக்கான செலவினங்களை பல்கலைக்கழக விதிமுறைகளின் படி அந்தந்த துறைகளே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அண்ணா நூற்றாண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த ரூ.16 ஆயிரம் உதவித்தொகை, ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அதே நேரத்தில் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த ரூ.25 ஆயிரம் ரத்து செய்யப்படுகிறது.

இந்தப் புதிய அறிவிப்பு 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இது தற்போதைய ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இனி வரவுள்ள மாணவர்களுக்கும் பொருந்தும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.