ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் கோயில், சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலத்தை அடுத்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கோவில் அமைப்புசிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம், கோவிலுக்கு எதிரில் உள்ளது. ராஜகோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன், கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன.
நூற்றுக்கால் மண்டபத்தில், திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூரணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது.
சுவாமி கருவறை கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடு அமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது.
ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும், கருவறை மேற்கு சுற்றுப் பிராகாரத்தில் உள்ளன. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி, தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிராகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் அமைந்துள்ளது.
திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். திருஞானசம்பந்தரின் திருமணத்துக்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால், அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்துக்குப் பதிலாக திருநீறுதான் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும் என்பது நம்பிக்கை. வருடம்தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தர் இறைவனோடு ஐக்கியமான திருவிழா மிகச் சிறப்பாக இங்கு நடைபெறுகிறது.
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து, தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். மனைவியுடன் இறைவன் திருவடி சேர்வதே ஏற்றதாகும் என்று கருதிய சம்பந்தர், பதிகம் பாடி இறைவனை துதிக்க, சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றி அதனுள் புகுவதற்கு ஒரு வாயிலையும் காட்டி அருளினார்.
சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும்படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுள் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.
சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. இத்தகைய சிறப்புமிக்க சம்பவம் நடைபெற்ற பெருமை உடைய சிவஸ்தலம் திருநல்லூர் பெருமணம் சிவலோகத் தியாகேசர் ஆலயம்.
இத்தலத்தில் இறைவன் சந்நிதி சுற்றுப் பிராகாரத்தில் காணப்படும் ரிணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதி ஒரு சிறப்பு வாய்ந்த சந்நிதியாகும்.
ரிணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கள்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால், நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற இத்தலம், ஒரு சிறப்புபெற்ற திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது. இத்தலம் வந்து இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வேண்டிக்கொண்டால், விரைவில் திருமணம் கைகூடி வரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாக நம்பிக்கை.
ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்துதான் சம்பந்தர் திருமணத்துக்குப் பெண் அழைப்பு நடைபெற்றது.
இந்த நல்லூர் கிராமத்திலுள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் பார்க்க வேண்டிய இடமாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜாதக தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால், தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.